-இ.கலைஅமுதன்-
தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழிப் போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்டனர்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
அதன்போது கடந்த 21 ஆம் திகதி தையிட்டி விகாரை முன்பாக நடைபெற்ற போராட்டத்தில் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் மற்றும் வேலன் சுவாமி , வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஷ் ஆகியோருடன் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் என ஐவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றினால் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொலிஸாரின் அடாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து வலி. வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்தவாறு சபை அமர்வில் கலந்துகொண்டனர்.


















