-நேற்று யாழ். நீதிபதி தலைமையில் ஆராய்வு-
-நீரை அகற்றிய பின் திகதி முடிவுசெய்யப்படும்-
-பி.டிலக்ஷன்-
செம்மணி மனிதப் புதைகுழியில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் அகழ்வுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத சூழல் காணப்படுவதால் குழிக்குள் தேங்கி நிற்கும் வெள்ள நீரை நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் வெளியேற்றி அகழ்வுப்பணியை ஆரம்பிப்பதற்கான திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கானது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நேற்றையதினம் காலை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது செம்மணி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு கள விஜயம் செய்ததன் பிற்பாடு ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதாக தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியின் தடவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றின் குழியில் வெள்ளநீர் நிரம்பி காணப்படுவதனால் அகழ்வுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாது எனவும், குழிக்குள் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன் பிரகாரம் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சட்ட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைவக நல்லூர் பிரதேச சபையினுடைய உதவியுடன் வெள்ள நீரினை நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. அதன் பிற்பாடு அகழ்வு பணிகளை ஆரம்பிப்பதற்கான திகதி தீர்மானிக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அழைக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வின் 9 நாட்களும், இரண்டாம் கட்ட அகழ்வின் 45 நாட்களும் என மொத்தமாக இதுவரை 54 நாட்கள் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இதுவரை செம்மணி மனித புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்தும் மொத்தமாக 240 மனித என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றுள் 239 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















