-பி.டிலக்ஷன்-
மழை காரணமாக செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதமானதால் கடந்தவருடம் ஒதுக்கிய நிதி திரும்பச் சென்றுள்ளது. மீண்டும் முன்னர் அனுமதி பெறப்பட்ட பாதீட்டினை நீதிமன்றத்தில் மீள சமர்ப்பித்து, நிதி விடுவிப்பின் பின்னர் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் என செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் சென்றுள்ளதா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
ஒவ்வொரு நிதி ஆண்டுகளுக்குமான நிதியானது அந்த ஆண்டிலேயே பிரயோகிக்கப்பட வேண்டும். மழை காரணமாக செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதமானதால் ஒதுக்கிய நிதி திரும்பிச் சென்றுள்ளது.
மூன்றாம் கட்ட அகழ் பணிகளுக்காக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் முன்னர் பாதீடு ஒன்று நீதிமன்றத்தினூடாக நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரமே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. மீண்டும் அந்த பாதீடு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி கோரப்படும். அதன் பின் நிதி விடுவிக்கப்பட்டதன் பிற்பாடு மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி இடம்பெற்ற செம்மணி வழக்கு விசாரணையின் போது சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவினால் முன்றாம் கட்ட அகழ்வுகளுக்கான எட்டு வாரங்களுக்கான பாதீடு நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு நீதி அமைச்சினால் நிதி விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் வருட இறுதியில் ஏற்பட்ட மழையுடனான காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகள் தாமதமானமை குறிப்பிடத்தக்கது.


















