கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன.
கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் நடத்தும் கலை இலக்கியப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இந்த விருது வழங்கும் விழாவில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்தன. அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேசத்துக்கு ஐந்து தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது.
திறந்த பிரிவு கவிதையாக்கத்தில் தம்பித்துரை குணத்திலகம் முதலாமிடத்தையும், நாட்டார் கலைகற்றல் ஆய்வில் செல்வம் அபிராமி இரண்டாமிடத்தையும், பாடலாக்கத்தில் தம்பித்துரை குணத்திலகம் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
அத்துடன் பாடல் நயத்தல் போட்டியில் த. அக்டோபர் ஷரா முதலாமிடத்தையும் மற்றும் சிறுவர் பிரிவு கையெழுத்துப் போட்டியில் எஸ். வயோமிகா இரண்டாமிடத்தையும் பெற்று பெருமை தேடித்தந்துள்ளனர்.
இந்த நிலையில், வெற்றியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழுடன் பணப்பரிசும் வழங்கப்பட்டது. அந்தவகையில், முதலாமிடம் பெற்றோருக்கு 15,000 ரூபாவும், இரண்டாமிடத்துக்கு 12,500 ரூபாவும் மற்றும் மூன்றாமிடத்துக்கு 10,000 ரூபாவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


















