-பாதுகாப்பு பிரதி அமைச்சர்-
யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவையெனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:
யாழ்ப்பாணம் படைத் தலைமையகம் அகற்றப்படவுள்ளதாகச் சிலர் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். மிகக் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவுமே இவ்வாறான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் காணிகளை விடுவிக்கும் போது, ‘தேசிய பாதுகாப்பு’ என்பற்கே முதலிடம் வழங்கப்படும்.
பாதுகாப்புத் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அனைத்துத் தரப்புகளுடனும் விரிவாக ஆராய்ந்த பின்னரே காணி விடுவிப்பு தொடர்பான இறுதித் தீர்மானங்கள் எடுக்கப்படும்.
நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றார்.


















