மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை (23) சிறப்பாக நடைபெற்றது. மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி சோசை அடிகளார் மற்றும் மடு திருத்தல நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மடு அன்னையின் திருத்தல போட்டிக்கோ முன்றலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்பணியாளர்கள், அருட்சகோதர சகோதரிகள் மற்றும் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு இறை வழிபாட்டுடன் முதலாவது நவநாள் வழிபாடுகளை ஆரம்பித்தனர்.

நிகழ்வின் ஆரம்பமாக மருதமடு திருத்தாயாரின் கொடியும், பாப்பரசரின் திருக்கொடிகளும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகையினால் ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றிவைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் திருச்செபமாலை மற்றும் நவநாள் வழிபாடுகள் நடைபெற்றன. வழமையின் பிரகாரம் நற்கருணை ஆண்டவரின் பிரசன்ன எழுந்தேற்றமும் இடம்பெற்றதுடன், இரு மொழிகளிலும் மறையுரைகள் வழங்கப்பட்டன.
மேலும், தேவஅழைத்தலுக்கான ஜெபமும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இடம்பெற்றதுடன், இறுதியாக நற்கருணை இறையாசீர் இறைமக்களுக்கு வழங்கப்பட்டு இரவு செபத்துடன் முதலாவது நாள் வழிபாடுகள் நிறைவடைந்தன.
குறிப்பாக, மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா ஆண்டுதோறும் ஜூன் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஜூலை 2 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலியுடன் நிறைவடைகிறது.
















