வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகின்றது.
குறித்த போராட்டம் யாழ்.செம்மணியில் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் எதிர்வரும் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இன்றைய போராட்டத்தில் வடக்குக் கிழக்கைச் சேர்ந்த பொது அமைப்புகள் முஸ்லீம் மக்கள் எனப் பலரும் இணைந்து கொண்டனர்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.


















