-பொலிஸாரின் அடாவடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-
-பா.சதீஸ்-
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஒரு வருட ஆட்சியை கொண்டாடி முடித்திருக்கும் நிலையில், தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர்; விடுத்துள்ள ஊடக அறிக்கையில்:
தையிட்டி திஸ்ச விகாரை நாட்டின் சட்டத்திற்கு, பௌத்த தர்மத்திற்கு எதிராகவும் சிங்கள பௌத்த ஆதிக்க மன நிலையில் நின்று கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடமாகும்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மக்கள் அறவழியில் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தின் போதான பொலிஸாரின் அராஜகம் சிங்கள பௌத்த அடக்குமுறை என்பதை ஆணித்தரமாக கூறுகின்றது. இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இனவாதம், மதவாதம் என்பவற்றிற்கு எதிரான அரசாங்கமாக தம்மை கூறிக் கொள்ளும் தற்போதைய தேசிய மக்கள் சக்தியும், அதன் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பொலிசாரின் அடாவடித்தனத்திற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என அடிக்கடி கூறும் தற்போதைய ஜனாதிபதி அதனை தனது அரசியலுக்காக மட்டும் பாவிக்காது லஞ்சம், ஊழல் என்பதற்கு மட்டும் கட்டுப்படுத்தாது இனங்களின் தனித்துவம், அவர்களின் அடையாள பாதுகாப்பு,அரசியல் உறுதி பாட்டு பாதுகாப்பு என்பதற்கும் பயன்படுத்த வேண்டுமென கோருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















