-சொ.வர்ணன்-
• தை பௌர்ணமி தினத்தில் பிரதிஷ்டை-
• பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு கோரி கடிதம்
எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த தினத்தில் நிகழ்வை நடத்துவதற்கான பாதுகாப்பு அனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
2026 தை மாதம் மூன்றாம் திகதி அன்று காலை 10 மணிக்கு கன்யாசந்துவ தும்ரி ஸ்தாச சி தி ராஜ விஹாரையில் இருந்து கொண்டு வரப்பட்டும் புத்தர் சிலை திஸ்ஸ ராஜ விஹாரையில் நிறுவப்படும்.
இதற்காக, பக்தர்கள் மற்றும் ஹிம்வரர்களின் பங்கேற்புடன் ஊர்வலம் நடத்தப்படுவதோடு அது தொடர்பில் தையிட்டி திஸ்ஸ விஹாரையின் தலைமை தேரருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் பங்கேற்பவர்கள் எந்த பயமோ சந்தேகமோ இல்லாமல் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காவல்துறையும் அதை வழங்குமாறு காவல்துறைக்குத் தெரிவிக்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி போயா தினத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த விகாரை தனியாருக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதனை அகற்ற வேண்டும் என வலிவடக்கு பிரதேச சபைகள் தீர்மானம் எடுக்கப்பட்ட நிலையில் எந்த ஒரு கட்டுமானங்களும் அங்கு இடம் பெறக் கூடாது என சபையால் விகாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான ஒரு நிலையில் புதிய புத்தர் சிலையை வைப்பதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


















